📅 Tuesday, 27 October 2026 📍 Detecting location… ⛅ --°C
உலகம்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் - வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் - வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மொத்தம் 73.31 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

உள்ளூர் நேரப்படி அந்நாட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் வாக்குச் சீட்டு முறையில் நடைபெறுகிறது.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. பாலஸ்தீனம், லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இஸ்ரேல் மோதலில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தேர்தல் நடைபெறுகிறது. மோதல் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல், பொருளாதார சரிவு ஆகியவற்றால் இஸ்ரேல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் உடனான இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகளின் மோதல் காரணமாக எரிபொருள் விநியோகம் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா, அதன் மூலம் அமைதி நிலை திரும்புமா என்ற எதிர்பார்ப்பில் உலக நாடுகள் உள்ளன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கும், காடி ஐசன்கோட், நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையே இந்த தேர்தலில் போட்டி நிலவுகிறது. இஸ்ரேலில் இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைத்தது இல்லை. அதனால் இந்த முறையும் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2023-ல் அக்.7-ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலை வாக்கு செலுத்துவதற்கு முன்பு சிந்தித்து பார்க்குமாறு எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த சூழலில் அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


Comments

No comments yet. Be the first to write.